திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மலை கிராம மக்கள் வசித்துவருகின்றனர். இந்த கிராமப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது.
வனத்துறை சார்பில் அவர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை தேவைகள் வழங்கப்படுவதில்லை எனவும் அவர்களுக்கான உரிமை பறிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், வனவாசி சேவா கேந்திரம் அமைப்பினர் பழங்குடியின மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்தனர்.
அடிப்படை உரிமைகள் வேண்டும்
அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வனவாசி சேவா கேந்திரம் அமைப்பினர்,"பழங்குடியின மக்களின் நீண்டநாள் குறைகளான வன உரிமை சட்டத்தின் கீழ் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வன உரிமைகள், வன பொருட்கள் சேகரித்தல் போன்ற அனைத்து உரிமைகளையும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி தரவேண்டும்.
அதை அரசு நிறைவேற்ற தவறினால், தேசிய பழங்குடியினர் ஆணையத்திடம் மனு அளித்து ஆறு மாதத்திற்குள் அவை நிறைவேற்றித் தரப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி