மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. கொடைக்கானலில் வசிக்கும் மக்கள் சுற்றுலா சார்ந்த தொழிலை நம்பி உள்ளனர். மலை சார்ந்த இடமாக இருப்பதால் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது.
கொடைக்கானல் என்றாலே குளிர் தான். கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கிய அங்கமாக கொடைக்கானல் இருந்து வருகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை சுற்றுலாப் பயணிகள் வருவதாக சுற்றுலாத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் சீசன் தொடங்கும். மே மாதம் என்றாலே சுற்றுலாப் பயணிகளின் மனதிற்கு வருவது கொடைக்கானலில் நடைபெறும் கொடை விழா. பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இந்த விழாவில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறும். இரண்டாவது சீசன் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடங்கும். இந்த மாதங்களில் குளிர் ஜீரோ டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இந்த சூழ்நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவர். கொடைக்கானலில் பொதுவாக சாலையோரங்களில் அழகு சாதனப் பொருள்கள், சாக்லேட் உள்ளிட்ட விற்பனையகம் அதிகளவில் உள்ளன. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக சாக்லேட், தைலம் ஆகியவற்றை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இதற்கு அடுத்தப்படியாக ஸ்வெட்டர் உள்பட உல்லன் ஆடைகள் விற்பனையாகின்றன. கொடைக்கானல் குளிர் பிரதேசம் என்பதால் அங்கு வசிக்கும் மக்கள் எப்போதும் ஸ்வெட்டர் அணிகின்றனர். இதனால் ஸ்வெட்டர் உள்பட உல்லன் ஆடைகள் விற்பனையகம் அதிகளவில் உள்ளன.
கரோனா தொற்றால் கொடைக்கானலில் சுற்றுலா சார்ந்த தொழில் பாதிக்கப்பட்டது. இதனால் அதையே நம்பி வாழ்ந்து வந்த மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அரசால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் சுற்றுலாத் தலத்திற்கான தளர்வுகள் மிகத் தாமதமாகவே வழங்கப்பட்டது.
இதனால் அங்கு அனைத்து தொழில்களும் முடங்கி இருந்தன. கொடைக்கானலில் அதிக பட்சமாக 13 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் இருந்து வருகிறது. வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொடைக்கானலில் அவ்வப்போது மழையும் திடிரென வெயிலும் மாறி மாறி வருகிறது. தற்போது பனி சீசன் தொடங்கியுள்ள நிலையில் கரோனா வேகமாக பரவும் என சுற்றுலாப் பயணிகள் அச்சப்படுகின்றன.
எனவே கரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் குளிரில் இருந்து தப்பிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் ஸ்வெட்டர் உள்பட உல்லன் ஆடைகளை வாங்கி வருகின்றனர். அதேபோல் அங்குள்ள விற்பனையங்களிலும் ஸ்வெட்டர் பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இதனால் அதிகளவில் ஸ்வெட்டர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. கரோனாவால் எட்டு மாதங்களுக்கும் மேலாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்த வியாபாரிகள் நிம்மதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மரங்கொத்தி பறவைகள்!