தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இளைய மகனான வெங்கடேசன், திண்டுக்கல் மென்டோன்சா காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24 .4. 2019 அன்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த அவர், வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபொழுது வீட்டின் பின்பக்க பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் 4 லட்சம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.
இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சுமார் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அமைச்சர் மகனின் வீட்டில் டிரைவராக வேலைபார்த்து வந்த பாண்டி தனது நண்பர்கள் ரவிக்குமார் மற்றும் வினோத் குமார் ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார், பாண்டி, வினோத் குமார், ரவிக்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 சவரன் தங்க நகை மற்றும் 3 லட்சம் ரூபாயை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் .