திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், காந்தி கிராம கிராமியப் பல்கலைகழகத்தின் தனிமைப்படுத்தும் சிறப்பு முகாமில் பணியாற்றி வந்துள்ளார்.
தொடர்ந்து, தனது சொந்த ஊரான நிலக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் பணியாற்றிய அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு அலுவலகம் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயச்சந்திரன் கூறுகையில், "அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அலுவலர்கள் அனைவரும் நான்கு நாட்களுக்கு அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.