திண்டுக்கல் மாவட்டம் நாயுடு மஹாலில் தென் மண்டல திமுக விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஐ. பெரியசாமி, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, வேளாண் விளைபொருள் வர்த்தகம், விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்திருத்தம் விவசாயிகளுக்கு எதிரானது. இது அவர்களின் வாழ்வாதாரத்தை வருங்காலத்தில் கேள்விக்குறியாக வழிவகுக்கும்.
உண்மையில் பாஜக கொண்டுவரும் சட்டத் திருத்தங்களும், திட்டங்களும் பன்னாட்டு, தனியார் நிறுவனங்களில் லாபத்திற்கு முதலீடாக அமைகிறது. குறிப்பாக சுற்றுச்சூழல் திருத்தச் சட்டம் மசோதா, வேளாண் திருத்தச் சட்டம் ஆகிய இரண்டும் நம் நாட்டு வளங்களை எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி தனியார் நிறுவனங்களுக்கு தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்த மட்டுமே உதவிக்கரமாக இருக்கும். இதுபோன்ற திருத்தங்களை முன்னெடுத்து நம் நாட்டு வளங்களை அழித்து விடும் நிலையை பாஜக உருவாக்கி வருகிறது.
குறிப்பாக, வேளாண் சட்டத் திருத்தத்தில் உள்ள அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்தம் உணவுப்பொருள்கள் பதுக்கலை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் கிடைக்காமல் போகும். இதனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆதார விலை கூட கிடைக்காமல் போகும்.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விவசாயிகளை அடமானம் வைத்து, விவசாயிகளை உறிஞ்சும் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்" எனக் கூறினார்.