திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே க.மேட்டுப்பட்டியில் காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி நாடாளுமன்ற உளுப்பினர் திருநாவுக்கரசர் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவெடுக்கும். ப.சிதம்பரம் வழக்கில் அவர் மீதான நற்பெயரை கெடுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அதனை அவர் சட்டரீதியாக எதிர்கொள்வார்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், "கல்வி நிறுவனங்கள் அதிகமுள்ள திருச்சியின் உட்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டாம். சட்டசபையையும் மாற்ற வேண்டாம் . ஆனால், மாநில அரசின் துறை சார்ந்த முக்கிய அலுவலகங்களை திருச்சியில் அமைப்பது நல்ல எதிர்காலத்தைத் தரும். இதனால்,கன்னியாகுமரி, கோவை ஆகிய பகுதியிலிருந்து வரக்கூடியவர்கள் திருச்சிக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
மேலும்," ஜம்முகாஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை அந்த மாநில மக்களின் அனுதியுடன் ரத்து செய்திருக்கவேண்டும். அவர்களின் கருத்தை கேட்டிருக்க வேண்டும். ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை அங்கு செல்ல அனுமதி மறுப்பதன் பொருள் அங்கு சட்டம் ஒழுங்கு இல்லை. அந்த மாநிலத்தின் உண்மை நிலையை மத்திய அரசு மறைக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது" என்றார்.