திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தேனி செல்வதற்காக பயணி ஒருவர் திண்டுக்கல் - தேனி அரசு பேருந்தில் ஏறி அமர்ந்துள்ளார். பேருந்தை இயக்குவதற்காக நடத்துநரும், ஓட்டுநரும் பேருந்தில் ஏறியுள்ளனர். அந்த சமயத்தில்,நடத்துனர் பேருந்தின் பின்புறம் வந்து தனது சீருடையை மாற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்த நபர், இங்கு வந்து ஏன் உடை மாற்றுகிறாய் என்று நடத்துநரிடம் கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பேருந்தைவிட்டு கீழே இறங்கியவுடன் சக அரசு ஊழியர்களை நடத்துநர் அழைத்துள்ளார். அப்போது அங்கு கூடிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் என ஐந்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து அந்த பயணியை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால், அந்த நபர் போதையில் இருந்ததாக அரசு பேருந்து ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் எடுத்த வீடியோ காண்போரை பதற வைக்கிறது.