திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ளது, வண்டிவாய்க்கால். இப்பகுதியில் உள்ள ஹோட்டல் கடை ஒன்றிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தன்னை உணவுப் பாதுகாப்பு அலுவலர் என அறிமுகப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு தனக்கு அன்பளிப்பாக பணம் தருமாறும் கேட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் மர்மநபரிடம் நீங்கள் யார்? எந்த அலுவலகத்தில் இருந்து வருகிறீர்கள்? என கேள்விகள் கேட்டதை அடுத்து சுதாரித்துக்கொண்டு அந்த நபர் செல்போன் பேசுவதுபோல் நடித்துக்கொண்டே வெளியே சென்று, அங்கு இருசக்கரவாகனத்தில் நின்றிருந்த நபருடன் சென்றுவிட்டார்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்குச்சென்ற உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அலுவலர்கள் பெயரைச்சொல்லி யாராவது பணம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் எச்சரித்தனர். பழனி பகுதியில் அலுவலர்கள் பெயரைச்சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து நகை திருடிய நிறைமாத கர்ப்பிணி கைது