திண்டுக்கல்: ஆத்தூர் தாலுகா, அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இப்போட்டியானது அய்யம்பாளையம் கணேசபுரம் முதல் சித்தூரை அடுத்த ஊத்து வாய்க்கால்மேடு வரை சுமார் 15 கி.மீ. தூரம் சென்று திரும்பியது. இதில் பெரியமாடு, நடுமாடு, கடைச்சான்மாடு என 3 வகையான போட்டிகள் நடந்தன. 3 வகையான போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த மாட்டிற்குத் தலா 1 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த மாட்டிற்கு 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாவது இடம் பிடித்த மாட்டிற்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டது.
இதில் மதுரை, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம், கோவை, தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட ஜோடி ரேக்ளா மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. இவ்விழாவிற்கு நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்திய எல்.முருகன்!