திண்டுக்கல்: ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாறைப்பட்டி கிராமத்தின் தோட்டத்து குடியிருப்பில் வசித்து வருபவர்கள், மாரிமுத்து - கஸ்தூரி தம்பதி. இவர்களது மகன் முகேஷ் (10). அதே பகுதியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சிறுவனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு திடீரென மயங்கி விழுந்து, கடுமையான வயிற்றுவலியால் துடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அருகிலுள்ள பழனி மற்றும் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்துள்ளனர். ஆனால், மேலும் சிறுவனின் உடல்நிலை முன்னேற்றமடையாததால், கட்டாயம் மேல் சிகிச்சை செய்ய வேண்டும் என சில மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து தங்கள் வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி மற்றும் நிலங்களை விற்று கடந்த 15 தினங்களுக்கு முன் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சுமார் 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து நவீன பரிசோதனை செய்ததில் அச்சிறுவனுக்கு 'வில்சன் காப்பர்' என்னும் நோயால் கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரத்த சுத்திகரிப்பு செய்தால் சரியாகிவிடும் என்றும் பல கட்ட சிகிச்சையளித்ததாக கூறப்படுகிறது.
தொடர் சிகிச்சையின்போதே மாணவனின் உடல்நிலைத் தொடர்ந்து மேலும் மோசமடைந்ததை அடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் இச்சிறுவனுக்கு லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய (வில்சன் காப்பர்) என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை செய்ய வேண்டும், இல்லை என்றால் சிறுவனை காப்பாற்றுவது கடினம் என்றும், அதனால் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறி அனுப்பி வைத்துவிட்டனர்.
அந்த ஏழை பெற்றோர்கள் தங்கள் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் காப்பாற்றிவிடலாம் என புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றுள்ளனர். அங்கும் அச்சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அரிதான இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை இல்லை; அதனால் நீங்கள் சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லுங்கள் எனக் கூறி அவர்களும் அனுப்பி வைத்துவிட்டனர்.
செய்வதறியாது தவித்த அந்த ஏழை தம்பதி. ஒவ்வொரு மருத்துவமனையாக ஏரி இறங்கியும் எந்த மருத்துவரும் சரியான பதிலை சொல்லாதால் கதறி அழுது கொண்டு வேறுவழியின்றி, என்ன செய்வதென்று புரியாமல், தற்போது தங்களது சொந்த ஊருக்கே மகனை அழைத்து வந்துவிட்டனர்.
இதுகுறித்து அச்சிறுவனின் பெற்றோர் கூறுகையில், ’எங்களது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலைக் குறைவு ஏற்படவே பழனி, திண்டுக்கல், மதுரை, புதுச்சேரி எனப் பல்வேறு ஊர் மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கி அலைந்தும், எங்களது மகனை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். தற்போது வீட்டிற்கு வந்துவிட்டோம். அவனின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இதனால், குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற நிலையில் வீட்டிற்கு வந்துள்ளோம். எனவே, தமிழ்நாடு முதலமைச்சரும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் சிறப்புக்கவனம் செலுத்தி, தனது மகனை எப்படியாவது காப்பாற்றிக் கொடுக்க வேண்டும்.
எங்கள் மகனுக்கு என்ன நோய் என்று இதுவரை தெரியவில்லை, ஒவ்வொரு மருத்துவர்களும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றனர். முதலமைச்சர் தலையிட்டு எனது மகன் உயிருடன்வாழ, உயர் சிகிச்சையளித்து, அவனை மீண்டும் நல்லபடியாக எங்களிடம் ஒப்படைக்க உதவ வேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: விழிப்புணர்வு பாடலை பாடிய மாணவி