நாடு முழுவதும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிலேயே இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளன.
ஆனால் தினமும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக பெரும்பாலானோர் நகர்ப் புறங்களுக்கு வந்து செல்கின்றனர். கரோனா வைரஸ் பரவுவது பற்றி, அதன் பாதிப்பு பற்றி அரசு தரப்பில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மக்கள் அதன் தாக்கம் குறித்த விழிப்புணர்வை பெற்றதாகத் தெரியவில்லை.
இந்தச் சூழ்நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரியும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காக, தருமபுரி மாவட்டம் அரூர் நகரப் பகுதியிலுள்ள இளைஞர்கள் சாலையில் கரோனா வைரஸ் போன்ற உருவத்தை வரைந்து விழித்திரு! விலகியிரு! வீட்டிலேயிரு! என்ற வாசகத்தை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வு ஓவியத்தினை அரூர் நகர்ப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சேலம் பிரதான சாலையில் தற்போது வரைந்துள்ளனர்.
மேலும், அரூர் பேருந்து நிலையம், கச்சேரி மேடு சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில், அரூர் பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தருமபுரி தற்காலிக சந்தையில் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கப் பாதை