சென்னை கிண்டி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிண்டி காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் கிண்டி, வேளச்சேரி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக அவ்வழியே இருசக்கர வாகனத்தில் உணவு டெலிவரி செய்ய வந்த ஒரு பெண்ணை மடக்கி சோதனை செய்துள்ளனர். அவர் கொண்டு வந்த பையில், சுமார் மூன்று கிலோ கஞ்சா இருந்துள்ளது. இதனால் அந்தப் பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வனிதா (32) என்பது தெரியவந்தது. வனிதா பகுதி நேர கால் டிரைவராகவும், ஸ்விகியில் உணவு டெலிவரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். கால் டிரைவராக செல்லும்போது வனிதாவிற்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, கஞ்சா சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், ஸ்விகியில் உணவு டெலிவரி செய்வதுபோல் கஞ்சாவை மறைத்துக்கொண்டு போனால் காவல் துறையினருக்கு சந்தேகம் வராமல் இருக்கும் என்பதால் இந்த முறையில் இவர் கஞ்சா கடத்தியுள்ளார்.
மேலும், வனிதா கோயம்பேடு பகுதியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்ததாகவும், இதேபோல் கிண்டியில் சப்ளை செய்ய கொண்டு போகும்போது காவல் துறையினரிடம் சிக்கியதும் விசாரணையின்போது தெரிவித்தார். அவரிடமிருந்து இரண்டு செல்போன்கள், 500 ரூபாய் பணம், மூன்று கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க... திண்டுக்கல்லில் 1 ஏக்கருக்கு கஞ்சா செடி... தீயில் இரையாக்கிய வனத்துறை!