தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நீரஜ் மிட்டல் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் நீரஜ் மிட்டல் பேசுகையில், "தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மேலும் 10,000 படுக்கை வசதிகள் கூடுதலாக தயார் நிலையில் வைத்திட வேண்டும். மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பெற்று வரும் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளவர்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளையும் தேவைகளையும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிப்பதற்காக செல்ஃபோன் செயலியை உருவாக்கி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
குடிமராமத்து திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் மற்றும் குளங்கள் நீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளன. அரசு அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை உடனடியாக சென்றடையும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ’சமூக நீதிக்காக அயராது உழைத்த பஸ்வான்’ - முதலமைச்சர் பழனிசாமி