தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் எச்சனஅள்ளி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது தாய் பெயரில் உள்ள விவசாய மின்இணைப்பை தன் பெயருக்கு மாற்றித் தரக்கோரி பென்னாகரம் மின்சார வாரிய அலுவலகத்தில் மனு அளித்திருந்தார். ஆனால், அலுவலர்கள் பெயரை மாற்றித் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற நாகராஜ், அலுவலர்களிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.
1500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மாற்றித் தருவதாக நாகராஜிடம் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜ், தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு காவலர்கள், நாகராஜிடம் ரசாயனம் தடவிய 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை வழங்கினர்.
இந்நிலையில், பென்னாகரம் சென்ற நாகராஜ், மின்சார வாரிய அலுவலகத்தில், உதவி பொறியாளர் ரவியிடம் 500 ரூபாயும் அலுவலகத்தில் பணியாற்றும் தமிழ்ச்செல்வன் என்பவருக்கு 100 ரூபாய் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாகவும் வழங்கினார்.
இதனை மறைந்திருந்து கண்காணித்த கிருஷ்ணராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ரவி, உதவியாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.