தர்மபுரி மாவட்டத்தில் விரைவில் அரசு வேளாண், தோட்டக்கலை பட்டய படிப்பு (டிப்ளமோ) கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக உயர் கல்வி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
காரிமங்கலம் வட்டத்தில் 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், "அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,297 மாணவ, மாணவியருக்கு ரூ.43.12 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்தியாவுக்கு முன்மாதிரி தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. பள்ளி இடைநிற்றலைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை மூலம் 14 வகையான பொருள்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது. திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் இந்தியாவில் வேறு மாநிலத்தில் செயல்படுத்தப்படுவதில்லை.
ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் தற்போதும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. பேருந்து வசதி இல்லாத கிராமங்களிலிருந்து குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு மாணவர்கள் வருவதற்காக அரசு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்திவருகிறது.
அரசு வழங்கும் மிதிவண்டிகளை மாணவ-மாணவிகள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில், 11ஆம் வகுப்பு பயிலும் 53 ஆயிரத்து 362 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.09 கோடி செலவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி, பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி, தொழில் பயிற்சி மாணவ, மாணவியருக்கு ரூ.44.95 கோடி செலவில் 36 ஆயிரத்து 258 விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வெளியிட இருக்கும் அறிவிப்பு
இக்கல்லூரி தொடங்கப்படும் நிலையில் தர்மபுரி மாவட்ட மாணவர்கள் அனைத்து வகையான உயர்கல்வி பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்படும். உயர் கல்வி பயில மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் சிறந்த முறையில் கல்வி பயில வேண்டும்.
தமிழ்நாடு அரசு மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. மாணவர்கள் கல்வி கற்பதில் முழு கவனம் செலுத்தி, உயர்கல்வி பயின்று தங்களது எதிர்காலத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கார்த்திகா, மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா். வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.
இதையும் படிங்க: சகாயம் வந்தால் அவருக்கு சகாயம் செய்யுமா அரசியல்?