நாடு முழுவதும் கரோனா பரவலைத் தடுக்க நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் 10 இடங்களில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பின்னரே வாகனங்கள் மாவட்டத்திற்குள் வர அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொம்முடி, கோம்பூர், அனுமன் தீர்த்தம், நரிப்பள்ளி, திப்பம்பட்டி, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளை சேலம் சரக காவல் துறை துணைத் தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் சோதனைச் சாவடியில் உள்ள காவலர்களுக்கு சானிடைசர்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவைகளை வழங்கியும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கிய அவர், சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பிஸ்கட், கபசுரக் குடிநீர், ஊட்டச்சத்து பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
தொடர்ந்து, சோதனைச் சாவடி வழியே வரும் வாகனங்களில் மின் அனுமதிச் சீட்டு உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்வில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அரூர், சார் ஆட்சியர் பிரதாப் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு வழக்கில் கைதான சபரிராஜனுக்கு உடல் நிலை குறைவு