தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் மான், யானை, காட்டெருமை குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், நேற்று (செப்.05) மாலை வனப்பகுதியில் இருந்து ஆண் புள்ளிமான் ஒன்று ஊருக்குள் நுழைந்தது. இதனை நாய்கள் துரத்தி கடித்ததில், புள்ளிமான் காயத்துடன் அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்குள் நுழைந்தது. இதை அறிந்த பொதுமக்கள் ஒகேனக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் புள்ளிமானை பாதுகாப்பாக உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து பிடிக்கப்பட்ட புள்ளிமானை ஒகேனக்கல் வனப்பகுதியில் விடுவதற்காக வாகனம் இல்லாமல், பாதுகாப்பற்ற முறையில் கொம்பில் கட்டி எடுத்து கொண்டு, ஒகேனக்கல் வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.
அப்போது வனப்பகுதியில் புள்ளி மானை விடுவிக்க முற்படும்போது மான் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதன்பின்னர் வனத் துறையினர் புள்ளிமானை உடற்கூறு ஆய்வு செய்து வனப் பகுதியிலேயே புதைத்தனர்.
ஒகேனக்கல் வனப்பகுதியில் புள்ளிமான்கள் உணவு தண்ணீருக்காக வெளியே வரும் போது தெருநாய் மற்றும் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் உயிருடன் மீட்கப்பட்ட புள்ளிமான், வாகனம் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் கொம்பில் கட்டி எடுத்துச் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை'