கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்துவருகிறது.
இன்று (ஆகஸ்ட் 8) காலை நீர்வரத்து 49 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், மாலை நிலவரப்படி நீர் வரத்து 60 ஆயிரம் கனஅடியை எட்டியுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக ஒகேனக்கல் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது. நீர்வரத்து உயர்ந்ததன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.