தருமபுரி மாவட்டம் அருகே வத்தல் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 74 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மூன்று ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இப்பள்ளியில் ஒரு ஆசிரியர், ஒரு தலைமையாசிரியர் மட்டுமே உள்ளனர். இரண்டு ஆசிரியர்கள் இருந்தாலும் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் முறையாக வருவதில்லை என மாணவ மாணவிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஊராட்சி ஒன்றிய பள்ளி மலைக்கிராமத்தில் உள்ள காரணத்தால் ஆசிரியர்களை கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், தலைமை ஆசிரியரும் அலுவல் பணிகளுக்காக தருமபுரி சென்றுவிட்டால் அங்கு பயிலும் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாக இருக்கிறது.
சில நேரங்களில் ஆசிரியர்கள் 11 மணி ஆனாலும் வர தாமதமானால் மாணவர்களே தங்களுக்கு தானே பாடம் எடுத்துக்கொள்ளும் அவல நிலை ஏற்படுகிறது என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மலைக் கிராமத்தில் உள்ள மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நம்பி உள்ள நிலையில், இவர்களுக்கு தகுந்த ஆசிரியர்களை நியமனம் செய்து மலைக்கிராம பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.