தருமபுரி: தருமபுரி மாவட்டம் சித்தேரி பகுதியைச் சுற்றி 62 மலைக் கிராமங்கள் உள்ளன. வருடம் 2022ஐ கடந்து விட்டாலும் 1800 காலக்கட்டங்களில் தான் இன்னும் அப்பகுதி மலைக்கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், தெருவிளக்கு, மருத்துவம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
நாடு சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் கடந்த நிலையில், 4ஜி, 5ஜி என தொலைத் தொடர்பு அசூர வளர்ச்சியை கண்டு வரும் நிலையில் 2ஜி சேவையைக் கூட பெற முடியாமல் அப்பகுதி கிராம மக்கள் திண்டாடி வருகின்றனர்.
அவசரத் தேவைக்கு ஒரு நிமிடம் செல்போனில் பேச வேண்டுமானால் கூட ஏறத்தாழ 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வாச்சாத்தி என்ற இடத்திற்கு சென்று மக்கள் போனில் பேசுகின்றனர். தேர்தல் நேரங்களில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதி கூறும் அரசியல்வாதிகள் அதன்பின் அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்க மட்டுமே திரும்பி வருவதாக மலைக் கிராம மக்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முயற்சியால் 62 மலைக்கிராமங்கள் பயன்பெறும் வகையில் செல்போன் டவர் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
இதுகுறித்து பேசிய தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், “பொதுமக்களுக்கு உறுதி அளித்தது போலவே பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலம் செல்போன் டவர் அமைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு மக்களவையில் இரண்டுமுறை பேசினேன். பிஎஸ்என்எல் நிறுவனத்தினர் டவர் அமைக்க நிதி ஆதாரம் இல்லை எனத் தெரிவித்தனர். அதன்பின் தனியார் நிறுவனமான ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் தனியார் நிறுவனத்தினர் அரசநத்தம், கலசப்பாடி, கோட்டக்காடு உள்ளிட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியைத் தேர்ந்தெடுத்து செல்போன் கோபுரம் அமைக்க முன் வந்தனர்.
செல்போன் கோபுரங்களுக்குத் தேவையான பொருட்களை மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல, அப்பகுதியின் ஊராட்சி மன்றத்தலைவர் கோவிந்தம்மாள் சண்முகம் பொதுமக்களுடன் இணைந்து, கீழ் பகுதியில் இருந்து கொண்டு சென்றார். இதனால், கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. மேலும், தருமபுரி மாவட்டத்தில் தொலைதொடர்பு பிரச்சனை உள்ள 10 மலைக்கிராமங்களில் செல்போன் டவர் அமைக்க முயற்சி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லண்டன் மாநாட்டில் தமிழ்நாடு சுற்றுல்லா துறை அரங்கு