தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, காரிமங்கலம், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், பூ உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களைச் சாகுபடி செய்துவருகின்றனர்.
இந்நிலையில், மாவட்டம் முழுவதும் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் ஒரு சில விவசாயிகள் பப்பாளி பழம் சாகுபடி செய்துவருகின்றனர்.
பப்பாளி பழங்கள் அறுவடைசெய்து சென்னை, கோவை, சேலம், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது. தற்போது கரோனா தீநுண்மி தொற்று பரவுவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டதால் விவசாய பொருள்கள் வெளியூர் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் விவசாய விளைப்பொருள்களை எடுத்துச் செல்வதற்கு தடை இல்லை எனத் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து உரிய அனுமதி பெற்று விவசாயிகள் தங்களது விளை பொருள்களை வெளியூர்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்துவருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் விளைகின்ற பப்பாளி பழங்களை வெளிமாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்துச் சென்றாலும் போதிய விலை கிடைக்காமல், பழங்கள் கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால், விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில், அரூர் பகுதியில் மிதமான மழை பெய்தும், பலத்த சூறைக்காற்று வீசியது. இந்தச் சூறாவளி காற்றில், அருண்பிரசாத்தின் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட பப்பாளி மரங்கள் உடைந்து சேதமடைந்தன. இதில் ஒரு சில மரங்கள் வேரோடு சாய்ந்தும், ஒரு சில மரங்கள் பாதியாக உடைந்தும் கீழே விழுந்தன.
![சேதமடைந்த பப்பாளி மரத்தை பார்வையிடும் விவசாயி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-dpi-01-strong-winds-agri-problam-vis-7204444_30042020162734_3004f_1588244254_1108.jpg)
பழம் பழுத்து அறுவடை செய்யும் நிலையில் இருந்த பப்பாளி மரங்கள், முழுவதும் கீழே விழுந்து சேதமடைந்தன. இதனால் சுமார் 5 லட்சம் ரூபாய் வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி கவலையடைந்துள்ளார்.
இதையும் படிங்க: நாடு முழுக்க கரோனா பரிசோதனை சாத்தியமா?