தர்மபுரி: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்யும் பணியில் முனைப்பு காட்டி வருகின்றன. இதற்கிடையில் சில கட்சிகள் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளன.
அந்த வகையில் அமமுக சார்பில் 15 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டப்பேரவைத் தனித் தொகுதியில் ஆர்.ஆர். முருகன் போட்டியிடுகிறார்.
தர்மபுரியில் ஒப்பந்ததாரராக செயல்பட்டு வரும் இவருக்கு, சரஸ்வதி என்ற மனைவியும், தனுஷ்குமார், ஹனுஷ்குமார் என்ற இரு மகன்களும் உள்ளனர். முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரூர் தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததால் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதிவியிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இவரது தந்தை ராஜமாணிக்கம் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு