தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்துக்குட்பட்ட செல்லியம்பட்டி கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்துகொண்டார்.
கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரியிடம், கடந்த கிராமசபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேள்வி எழுப்பினர். முறையாக மின் விளக்கு எரியவில்லை, ஊராட்சியில் நடைபெற்ற கட்டிடப் பணிகள், சாலைகள் தரமில்லை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை கூறினர். ஜனவரி 26ஆம் தேதியன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை வசதி வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பதிவேட்டை கேட்டுள்ளார். அதற்குப் பதிவேடு கையில் இல்லை என்றும், புதிய பதிவேடுதான் உள்ளது என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் பழைய பதிவேடு வேண்டும் என உறுதியாகக் கேட்டபின் சுமார் 2 மணி நேர இடைவேளைக்குப் பிறகு பதிவேட்டை செந்தில்குமாரிடம் சமர்ப்பித்தனர். இப்பதிவேடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் சாலைகள் ஏன் அமைக்கவில்லை உள்ளிட்ட பல கேள்விகளை செந்தில்குமார் எழுப்பினார். பொதுமக்களும் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேள்வி எழுப்பினர், அவர்களுக்கு பதிலளிக்க முடியாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் கௌரி கூட்டத்திலிருந்து வெளியேறினார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சென்று நீங்கள் பதிலளித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதன்பின் கௌரி மீண்டும் வந்து அமர்ந்தார்.
தொடர்ந்து பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பழுதான மின் விளக்குகளை 15 நாட்களில் பழுது நீக்கித் தர வேண்டுமென்று கௌரியிடம் கூறினார். மேலும் அடுத்த கிராம சபைக் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'வருது வருது வடகிழக்குப் பருவமழை... ஆயத்தமாகுங்க!' - அறைகூவல் விடுக்கும் உயர் அலுவலர்