தருமபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், “தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இம்மாதம் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், பொது மக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க, விழா கொண்டாட, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை.
பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிறிய திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது அரசு அறிவுறுத்திய வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்களும், கோயில் நிர்வாகமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வழிபாட்டு தளங்களிலும் பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.