தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், டி.கனிகாரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் அத்தொகுதி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்தார்
தர்மபுரி மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த கழிப்பறைக் கட்டடத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்ததை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்குமார் "அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள், கழிப்பறை, சுகாதார வசதியின்மை போன்ற காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலை ஏற்படக்கூடாது என்ற நோக்கில் தர்மபுரி மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு மகளிர் பள்ளிகளுக்கு நவீன முறையில் அனைத்து வசதிகளும் கொண்ட கழிப்பறை கட்டும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
தற்போது நல்லம்பள்ளி வட்டம், டி.கனிகாரஅள்ளி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இத்திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட கழிப்பறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற அரசுப் பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளைக் காட்டிலும் தரமான நவீன வசதிகள் கொண்ட கழிப்பறையாக இந்தக் கழிப்பறை அமைந்துள்ளது.
நாப்கின் எரியூட்டும் இயந்திரமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இதுபோன்ற சுகாதார வசதிகள் பள்ளிகளில் இல்லை என்ற காரணத்தைக் காட்டி பெற்றோர்கள் பெண் குழந்தைகளை பாதிலேயே பள்ளிகளை விட்டு நிறுத்தி விடுகின்றனர். இதைத் தடுப்பதற்காகவே இந்த நவீன கழிப்பறை கட்டும் திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கழிப்பறைக் கட்டடத்தில் நாப்கின் இயந்திரமும் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கழிப்பறைக் கட்டடத்தை சரியான முறையில் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க : தர்மபுரியில் இரண்டரை கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கிய எம்எல்ஏக்கள்!