தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே மாவட்ட திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மொரப்பூர் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக மாவட்டச் செயலாளரும் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மொரப்பூர் ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும், திமுகவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற வேண்டும் எனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது பேசிய தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, "மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் திமுகவிற்கு நான்கு உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் என திமுகவுக்கு ஆதரவாக மொத்தம் ஆறு பேர் உள்ளனர்.
ஆனால் அதிமுகவில் ஒன்று, பாட்டாளி மக்கள் கட்சியில் மூன்று என அதிமுகவுக்கு நான்கு உறுப்பினர்களே ஆதரவாக உள்ளனர். இதனால் தேர்தலை முறையாக நடத்தாமல் தேர்தல் அலுவலருக்கு உடல்நிலை சரியில்லை என ஒத்திவைத்துள்ளனர்" என்றார்.
இந்தத் தோ்தல் முறைகேடுக்கு தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள எந்த சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டாலும் கே.பி. அன்பழகன் நிச்சயம் தோல்வியடைவார் என்றும் கூறினார்.
தமிழ்நாடு அரசு குறித்தும், உயர் கல்வித் துறை அமைச்சர் குறித்தும் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகம் எதிர்த்து பேசாத தடங்கம் சுப்பிரமணி, தற்போது திடீரென அமைச்சர் குறித்தும் அதிமுக அரசு குறித்தும் பேசியிருப்பது திமுகவினரிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அம்மா இளைஞர் விளையாட்டு மைதானம்!