மத்தியப்பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தில் வசித்துவரும் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் கடந்த மார்ச் மாதம் வீட்டில் தனியாக இருந்தபோது தீபக் யாதவ் என்பவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனால் சிறுமி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் தீபக் யாதவை மத்தியப்பிரதேச மாநில காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமி பாலியல் சீண்டல் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்த சம்பவத்தை சமூக வலைதளம் மூலம் அறிந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில்குமார், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சிறுமியை சந்தித்து, அவர்களது பெற்றோர்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து சிறுமியின் மருத்துவ செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் வழங்கினார். மேலும் அவர்களுக்கு உதவி செய்வதாக உறுதியளித்தார்.
இது குறித்து பேசிய தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில் குமார், 'பாலியல் சீண்டல் காரணமாக, சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் அறிந்துகொண்டு நேரடியாக சந்தித்து அந்த குடும்பத்திற்கு ஆறுதலைத் தெரிவித்து நிதி உதவி வழங்கினேன்.
மேலும் சிறுமியின் பெற்றோர் விருப்பப்பட்டால் சிறுமிக்கு தமிழ்நாட்டிலோ அல்லது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர் தரமான சிகிச்சை வழங்க அனைத்து நடவடிக்கையும் எடுப்பேன்’ எனத்தெரிவித்தார்.
இதையும் படிங்க: வினையான வாட்ஸ்அப், சிக்கிய பெண் ஐஏஎஸ்.. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திடீர் திருப்பம்!