தருமபுரி மக்களவை உறுப்பினர் எஸ். செந்தில்குமார் ட்விட்டரில் தமக்கு கோரிக்கைவிடுக்கும் மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார். முன்னதாக கோவையைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஒருவர் விளையாட்டுப் போட்டியில் பங்குபெற நிதி உதவி கோரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, வீராங்கனையின் வங்கிக் கணக்கு எண்ணை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் செந்தில்குமார். அப்பதிவை தொடர்ந்து ஏராளமானோர் அந்த மாணவிக்கு நிதி உதவி வழங்கினர். அதேபோல், மருத்துவக் கல்லூரியில் படிக்க நிதி இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி ஒருவருக்கு தனியார் கல்லூரி தாளாளர் ஒருவர் மூலம் படிக்க ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், அவரது தருமபுரி தொகுதியில் அரூர் வட்டத்திற்கு உட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்ட புதிய சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என புகைப்படத்துடன், கோரிக்கை ஒன்றை தமிழ் அழகன் என்பவர் ட்விட்டரில் விடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, செந்தில்குமாரின் முயற்சியால் இரண்டு நாட்களில் மின் கம்பம் அகற்றப்பட்டது. இப்படி ட்விட்டரில் பதிவிடப்படும் மக்களின் கோரிக்கையை செந்தில் நிறைவேற்றியுள்ளது அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.