தருமபுரி அகில இந்திய வானொலி நிலையம் அதியமான்கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. வானொலி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 2002ஆம் ஆண்டே முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் இருந்து வந்தநிலையில், அன்றைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில், போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து 2007ஆம் ஆண்டு வானொலி நிலையத்தின் உள்ளூர் ஒலிபரப்புத் தொடங்கியது.
தொடக்கத்தில் காலை 6 மணி முதல் 12 மணி வரை வானொலி நிலையம் இயக்கப்பட்டும், பின் மதியம் 12 மணி முதல் 5 மணி வரை சென்னை ரெயின்போ பண்பலை நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பு செய்யப்பட்டும் வருகின்றன. மாலை 5 மணியுடன் நிகழ்ச்சி ஒலிபரப்புகள் நிறைவு செய்யப்பட்டு, மீண்டும் அடுத்த நாள் காலை 6 மணிக்குத் தான் ஒலிபரப்புத் தொடங்குகிறது.
இந்த தருமபுரி அகில இந்திய வானொலியின் வாயிலாகப் பல்வேறு பொதுமக்கள் சார்ந்த நிகழ்ச்சிகள், விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகள், அரசின் நலத்திட்டங்களும் மக்களைச் சென்றடைகின்றன. இதனால் வானொலி நிலைய ஒலிபரப்பை இரவு 12 மணி வரை நீட்டிக்க வேண்டுமென பொதுமக்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இக்கோரிக்கையை ஏற்று, இன்று தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், டெல்லியில் மத்தியத் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒலிபரப்பப்பட்டு வருகிற தருமபுரி அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான நேயர்கள் பயன்பெற்று வருகின்றனர் எனவும், தற்போது மாலை ஐந்து மணியுடன் முடிவடைகிற ஒலிபரப்பு நேரத்தை, பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க இரவு 12 மணி வரை நீட்டிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: