தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை முதன்மைத் தொழிலாக கொண்ட மாவட்டம் ஆகும். பாலக்கோடு, பென்னாகரம், வெள்ளிச் சந்தை, மாரண்டஅள்ளி, பேகார அள்ளி உள்ளிட்டப்பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். பாலக்கோடு நகரப்பகுதியில் தக்காளிக்காக பிரத்யேக தக்காளிச் சந்தை செயல்பட்டு வருகிறது.
கடந்த இரு வாரங்களாக அப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து கிலோ 8 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மழையின் காரணமாக தக்காளி செடிகளில் பூச்சித் தாக்குதல், தக்காளி பழங்களில் வெடிப்பு காரணமாக தக்காளி பழங்கள் சிறிய அளவிலேயே காய்க்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், முதல் தரமான தக்காளி கிலோ 8 ரூபாய்க்கும், இரண்டாம் தரமான தக்காளிகளை வியாபாரிகள் விலை குறைவு காரணமாக வாங்குவதில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, கூலி ஆட்கள் வைத்து தக்காளிப்பழங்களைப் பறித்து, சந்தைக்குக்கொண்டு சென்ற விவசாயிகள் விற்பனை ஆகாத தக்காளிகளை ஆற்றுகொட்டாய் பகுதியில் உள்ள சின்னாற்று பாலத்தில் கூடை கூடையாக கொட்டிய அவலம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தக்காளி பழங்களை பயிரிட்டு அறுவடை செய்வதற்கு மூன்று மாதம் ஆகிறது. பூச்சித் தாக்குதல், மழை போன்ற பிரச்னைகளையும் தாண்டி விவசாயிகள் விளைவித்த தக்காளிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் ஆற்றில் கொட்டும் நிலை காண்போரை கண் கலங்க செய்தது.
இதையும் படிங்க: Goat-களுக்கு ரெயின் கோட் - தஞ்சாவூர் விவசாயி அசத்தல்!