சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. தருமபுரியின் தொப்பூர் கணவாய் பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது அதன் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, சாலையில் சென்றுகொண்டிருந்த மினி லாரி, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி பாலத்தின் சுவரில் மோதி நின்றது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனம், இரண்டு மினி லாரிகள், 12 கார்கள் அடுத்தடுத்து மோதி உருக்குலைந்து போயின. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த எட்டுக்கும் மேற்பட்டோர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தக் கண்டெய்னர் லாரியை ஓட்டிவந்த நட்புதீன் என்ற ஓட்டுநர் விபத்து ஏற்பட்டபின் வனப்பகுதிக்குள் புகுந்து தலைமறைவானார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தொப்பூர் காவல் துறையினர், விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரியில் கோர சாலை விபத்து - நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு