மோரிகான்(அசாம்): மருத்துவ வசதிகள் இல்லாத அசாமின் பிரமபுத்திரா நதியின் தொலைதூர கழிமுகப்பகுதிக்கு சென்ற ஈடிவி பாரத் அனூப் சர்மா, வலிமையான பிரமபுத்திரா நதியின் கரையோர மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கலங்கரை விளக்கமாக திகழும் படகு மருத்துவமனை குறித்து விவரிக்கிறார்.
நம்பிக்கை மருத்துவமனை: தூய்மையான பிரமபுத்திரா நதி நீர் பகுதியில் அடிக்கும் காற்று, அந்த நிசப்தத்தில் லேசான இரைச்சல் ஒலியை எழுப்புகிறது. டிசம்பர் மாத குளிர் உடலை நடுக்க செய்யும் நிலையில், தம் உடலில் போர்த்தியிருக்கும் துண்டு காற்றில் நழுவி விழுந்து விடாமல் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நதிக்கரையின் மணற்பரப்பில் 75 வயதான முதியவர் மைனுல் ஹக், அமர்ந்திருக்கிறார். படகு மருத்துவமனை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் பிரமபுத்திரா நதியை வெறித்து பார்த்தபடி காத்திருக்கிறார். அந்த மருத்துமனைதான் சுவாச கோளாறு முதல், உயர் ரதத அழுத்தம், நீரிழிவு உள்ளிட்டவற்றுக்கு குணம் அளிக்கும் மருத்துவமனையாகும். அது ஒரு படகு மட்டும் அல்ல, மைனுல் ஹக் உள்ளிட்ட சித்தல்மாரி தீவுப் பகுதியை சேர்ந்த எண்ணற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரே ஒரு நம்பிக்கையாக உள்ளது.
அசாமின் மத்திய பகுதியில் உள்ள மோரிக்கான் மாவட்டத்தின் சித்தல்மாரி தீவுப் பகுதியில் குறுவிவசாயி மைனுல் வசிக்கிறார். அவருடன் அவருடைய மகன் ரஃபிகுல் ஹக் உடன் இருக்கிறார். அவரும் ஒரு விவசாயி, அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தமது தோல் தொற்றுக்கு பரிசோதனை செய்வதற்காக அவரும் காத்திருக்கிறார். மைனுல், அவரது மகன் ஆகியோர் மட்டுமின்றி அந்த கிராமத்தை சேர்ந்த இதர பலரும் அசாம் மொழியில் நம்பிக்கை என்று பெயரிடப்பட்ட படகு மருத்துவமனைக்காக காத்திருக்கின்றனர்.
22 கிராம மக்களுக்கு சிகிச்சை: அசாமின் ஆற்று பகுதிகள் முழுவதும் தனித்தனி தீவுப்பகுதிகள், ஆற்றின் கழிமுகப்பகுதியை ஒட்டி இருக்கும் தாழ்வான பகுதிகளைக்கொண்டிருக்கின்றன. இந்த பகுதிகளில் 25 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலும் அவர்கள் விளிம்பு நிலை விவசாயிகளாக உள்ளனர். இந்த தொலைதூர தீவுகளில் 3.6 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு நிலம் உள்ளது. இந்த பகுதிகள் ஒட்டு மொத்த வளர்ச்சி, சாலை வசதி, பள்ளிகள், சுகாதார வசதிகள் ஆகியவற்றில் பின்தங்கி உள்ளன. அடிப்படை சுகாதார வசதிக்கு கூட கடினமான பயணம் மேற்கொண்டு அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது.
வடகிழக்கு ஆய்வு மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தால் கடந்த 2005ஆம் ஆண்டு இந்த படகு மருத்துவமனை தொடங்கப்பட்டது. பின்னர் இது தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைக்கப்பட்டது. இந்த படகு மருத்துவமனைகள் மருத்துவ வசதி அளிக்கும் பாலமாக திகழ்கின்றன. இந்த படகு மருத்துவமனைகள் வலிமைமிக்க பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளில் பயணித்து, தொலை தூரத்தில் உள்ள கழிமுக பகுதியில் உள்ள சமூகத்தினருக்கு அத்தியாவசியமான சுகாதார வசதிகளை அளிக்கின்றன.
இது குறித்து பேசிய நம்பிக்கை படகு மருத்துவமனையின் மாவட்ட திட்ட அலுவலர் ஷியாம் ஜித், "மோரிகான் மாவட்டத்தில் மட்டும் ஒரு படகு மருத்துவமனை 22 கிராமங்களில் 10,300 பேருக்கு சிகிச்சை அளிக்கிறது. மாதம் ஒரு முறையாவது ஒரு கிராமத்துக்கு படகு மருத்துவமனை சென்று விடும். முறையான பரிசோதனை, தடுப்பூசிகள், மருந்துகள் அளிக்கப்படுகிறது. படகு மருத்துவமனை ஒவ்வொரு கிராமத்துக்கும் செல்லும் முன்பு அங்குள்ள தொடர்புகள் வாயிலாக முன்கூட்டியே மருத்துவ சுகாதார அலுவலர்கள் தகவல் சொல்லி விடுவார்கள்.
இன்றியமையாத சிகிச்சை வசதி: ஒவ்வொரு படகு மருத்துவமனையிலும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர். அந்த சமூகத்தினருக்கு தேவைப்படும் வகையிலான மருத்துவ முகாம்களை அவர்கள் நடத்துகின்றனர். அதிநவீன சிகிச்சை தேவைப்படும் சூழல்களில் அத்தகைய நோயாளிகள் மாவட்ட மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றனர்.
அனைத்து நோயாளிகளின் தரவுகளும் ஆவணப்படுத்தப்பட்டு தேசிய சுகாதார இயக்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன," என ஷியாம்ஜித் கூறினார். இதன் மூலம் முறையான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதால் சுகாதார முடிவுகள், திட்டமிட்ட இடையீடுகள் எளிதாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது,"என்று கூறினார்.
மைனுல் போன்றவர்களுக்கு இந்த படகு மருத்துவமனை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இது குறித்து பேசிய மைனுல் ஹக், "அருகில் உள்ள நகரங்களுக்கு செல்வது என்பது எங்களுக்கு விருப்பமானதாக இல்லை, வாடகைக்கு படகு எடுத்துக் கொண்டு செல்வது அதிக செலவு பிடிக்கக்கூடியதாகும். எனவே பெரும்பாலானோரால் அவ்வாறு செலவு செய்ய முடியாது. எனவே இந்த படகு மருத்துவமனைதான் எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை,"என்றார்.
40 லட்சம் மக்களுக்கு பயன்: இந்த படகு மருத்துவமனையின் நோக்கம் மற்றும் முயற்சியைப் பற்றி பேசிய வடகிழக்கு ஆய்வு மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தின் தகவல் தொடர்பாளர் பஸ்வதி கோஸ்வாமி, "மருத்துவ வசதி கிடைக்காத பகுதிகளில் சுகாதாரச் சேவையை வழங்கி தாய், சேய் இறப்பு விகித த்தை குறைப்பதே இந்த படகு மருத்துவமனைகளின் நோக்கம். இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து அசாமின் 15 மாவட்டங்களில் 40 லட்சம் மக்களை சென்றடைந்திருக்கிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், ஆய்வக நிபுணர்கள் என்று 15 பேரை உள்ளடக்கியதாக இந்த குழு உள்ளது. குறிப்பாக தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் நலனை நோக்கமாக கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். பெரும்பாலான பெண்கள் இன்னும் வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்கின்றனர். பாதுகாப்பான குழந்தை பிரசவ முறைகள் குறித்து விழிப்புணர்வு வளர்ச்சி பெற்று வருகிறது,"என்றும் அவர் கூறினார்.
படகு மருத்துவமனைகள் மூலம் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், சுத்தம், சுகாதாரம் குறித்தும் ஆற்றின் கரையோரம் வசிக்கும் சமூகத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அசாமில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பருவநிலை மாற்றத்தால் நேரிடும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
பருவநிலையால் பாதிப்பு: முன்கூட்டிய கணிக்க முடியாத வானிலை நிலவரங்கள் காரணமாக அசாமின் ஆற்றின் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெப்பம், சீரற்ற முன்கூட்டியே கணிக்க முடியாத மழைப்பொழிவு முறைகள், அதிகரித்து வரும் வெள்ளத்தின் தீவிரம் விளிம்பில் வாழ்க்கையை நடத்தும் விளிம்புநிலை மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
அசாமின் துப்ரி மாவட்டத்தில் படகு மருத்துவமனைகள் குறித்து ஆய்வு நடத்தும் ஆராய்ச்சியாளர் நிமிஷா புயான், "முன் கூட்டியே கணிக்க முடியாத வானிலை முறைகள், சீரற்று பெய்யும் மழை, மற்றும் கடுமையான வெள்ளம் ஆகியவை இந்த சமூகத்தினரை எளிதாக பாதித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மோசமாக்குகின்றன. எனவே, இந்த படகு மருத்துவமனைகள் அவர்களுக்கான வரையறுக்கப்பட்ட இந்த சிகிச்சை முறையானது அவசியம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய தேவையைக் கொண்டிருக்கிறது.
துப்ரி மாவட்டத்தில் மட்டும் ஆற்றம் கரையோரம் 400 பேர் வசிக்கின்றனர். அவர்களுக்கான சவால்கள் மிக அதிகம். அடிப்படை சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு இன்மை, பெரும் அளவில் அவர்களின் உடல்நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனினும், ஒரு நேரத்தில் ஒருமுறை மட்டுமே செல்லும் இந்த படகு மருத்துவமனைகள் வித்தியாசத்தை உருவாக்குகின்றன,"என்றார்.
சித்தல்மாரி தீவுப் பகுதியில் படகு மருத்துவமனை நிறுத்தப்பட்டிருக்கிறது. மைனுல் ஹக் மற்றும் எண்ணிக்கையற்ற பலரும் நம்பிக்கையளிக்கும் முகங்களுடன் அங்கு குவிந்திருக்கின்றனர். நம்பிக்கை என்பது ஒரு படகு மட்டுமல்ல. மேலும் பாதுகாப்பான எதிர்காலத்துக்கான உடல்நலத்துக்கான ஒரு நம்பிக்கையாகும்.