தருமபுரி மாவட்டத்தில் 370 சட்டப் பிரிவு ரத்து குறித்து, பாஜக சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், இந்தியாவில் உள்ளவர்கள் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் தனித்தனி அட்டை வைத்துக் கொள்ளாமல், ஒன்றாக ஒரே அட்டையாக வைத்துக் கொள்ளவே, ஒரே நாடு ஒரே அடையாள அட்டை கொண்டு வரப்படுகிறது. ஆனால், மம்தா பானர்ஜி இதனை எதிர்த்து வாதிடுகிறார். எந்த நாட்டிலாவது அந்நாட்டின் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்குவதை எதிர்ப்பார்களா? அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசுகையில், நாட்டின் முதல் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவின் ஆட்சி, ஒரு தலைமைப் பண்பு இல்லாத, திறமை இல்லாத, தன்னம்பிக்கை இல்லாத அரசாக இருந்தது. இந்தியக் குடியுரிமை சட்டம், அரசியல் சட்டம் வந்தபோதே தேசிய அடையாள பதிவேடு வந்திருக்க வேண்டும். இந்த நாட்டிற்குள் யார் வேண்டுமானாலும் வரலாம், வெளியே செல்லலாம் என்று சொல்பவர்கள் நாட்டின் விரோதிகள் ஆவர். எல்லோரும் வந்து செல்வதற்கு இது என்ன சத்திரமா என்று காட்டாமாக பேசினார்.
மேலும், தமிழ்நாட்டில் சில நாட்களாக நல்ல செய்திகள் மட்டுமே என் காதில் விழுகிறது. இந்தி திணிப்பு எதிர்த்து திமுகவின் போராட்டம் வாபஸ், ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ், வங்கி ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என நல்ல செய்திகளே வந்துகொண்டிருக்கின்றன என்றார்.
இதையும் படிங்க: திமுகவினர், திருமா, வைகோ இந்த நாட்டின் தீய சக்திகள் -ஹெச்.ராஜா