தர்மபுரி: அரூர் மருதிப்பட்டி கீழ் மொரப்பூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சங்கத் தலைவராக இருந்தவர் பார்த்திபன். இவர் அதிமுகவைச் சேர்ந்தவர். செயலாளராக பொன்னுசாமி என்பவர் இருந்து வந்தார்.
இந்நிலையில், இந்த கூட்டுறவு சங்கத்தில் பயிர்க் கடன், விவசாயக் கடன், நகைக் கடன் உள்ளிட்ட கடன்களை வழங்காமலேயே, வழங்கியதாக முறைகேடு செய்துள்ளதாக தர்மபுரி மாவட்ட வணிகக் குற்ற புலனாய்வு பிரிவினருக்கு புகார்கள் வந்தன.
இந்தப் புகார்களையடுத்து வணிகக் குற்ற பிரிவினர் மேற்கொண்ட ஆய்வில் கடன் வழங்காமல் கடன் வழங்கியதாக 43 லட்சத்து 31 ஆயிரத்து 472 ரூபாயை முறைகேடு செய்தது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து முறைகேடு செய்த அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பார்த்திபன், சங்கச் செயலர் பொன்னுசாமி, எழுத்தர்கள் சிவலிங்கம், கருணாநிதி ஆகிய நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சபாஷ்.. தாம்பரத்தில் பளபளக்கும் பட்டாக்கத்தி... பதுங்கிய கும்பல், தூக்கிய காவலர்கள்!