நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து உலக சாதனை நடத்த திட்டமிட்டிருந்தது.
அதன்படி, சிதம்பரத்தில் நேற்றிரவு (ஏப்ரல் 9) 8017 பேர் கலந்துகொண்டு ’வொயிட் போர்டு’ கையெழுத்திடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலர் பேசுகையில், 'முதன்முறையாக தேர்தல் விழிப்புணர்வு குறித்து உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. தேர்தலில் அனைவரும் நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும். மேலும், கடலுார் மாவட்டத்தில் மூன்றாயிரத்து 500 காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். பத்து கம்பெனி துணை ராணுவம் வர உள்ளது. சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கடலுார் மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் 60 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை. எனவே அங்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என அவர் தெரிவித்தார்.