கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாமக பிரமுகர் சங்கர் என்பவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறித்து ஒருவர் அவதூறாகப் பேசி சமூக வலைதளங்களில் காணொளியைப் பதிவிட்டுள்ளார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி, மீராளூர் காலனியைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவரைக் கைது செய்தனர்.
இதேபோல் காட்டுமன்னார்கோவில் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், குறிப்பிட்ட சமுதாயம் குறித்து அவதூறாகப் பேசிய காணொளி ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்டு விசாரணை நடத்திய காவல் துறையினர், ஈச்சம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அருள்ராஜ் (28) என்பவரை கைது செய்தனர்.
காவல் கண்காணிப்பாளர் சரவணனின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் சமூக வலைதளங்களில் அவதூறு காணொளியை வெளியிட்ட பொன்னம்பலம், அருள்ராஜ் ஆகிய இருவரையும் காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.