கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனையடுத்து, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தும் என அறிவித்தது. அதன்படி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், கறுப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரி கூறுகையில், 'தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக்கின்ற காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் இணைந்து இன்று மாநிலம் முழுவதும் மோடி அரசாங்கத்திற்கு எதிராகவும் எடப்பாடி அரசுக்கு எதிராகவும் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
மேலும், மது ஏழ்மையை அதிகரிக்கும், அறியாமையை அதிகரிக்கும், குடும்ப வன்முறையை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், மது கடையைத் திறந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...விபத்து ஏற்பட்ட விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலை யாருடையது?