தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல மாணவ மாணவிகளுக்கு இது நாள்வரை மடிக்கணினி கிடைக்காமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த மாணவர்கள் ஆங்காங்கே சாலை மறியல், முற்றுகை போராட்டத்தை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று கடலூரில் தனியார் பள்ளியில் மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தொழில்துறை அமைச்சரும், கடலூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சி. சம்பத் 2019-20ஆம் ஆண்டு வரை பயின்ற பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.
அப்போது 2017-18ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு இது நாள் வரை அரசு வழங்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை எனவும், எனவே தங்களுக்கு அரசு அறிவித்த இலவச மடிக்கணினி உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காத்திருந்த மாணவர்களை அமைச்சர் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அமைச்சர் வெளியே வரும்போது அவரை மாணவர்கள் முற்றுகையிட முயன்றதால் அங்கு சறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.