கடலூர் மாவட்டம் பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்த கம்ரூனீசா என்ற கணவரை இழந்த பெண் தன் குடும்பத்திற்கு வாரிசு சான்றிதழ், தன் பிள்ளைகளுக்கான சாதி சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், சான்றிதழ் வழங்குவதற்காக வட்டாட்சியர் கண்ணன், துணை வட்டாட்சியர் அருள்பிரகாசம், இடைத்தரகர் ருத்ர வன்னியன் ஆகியோர், அந்த பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து கம்ரூனிசா கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், அலுவலர்களின் அறிவுறுத்தல் படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொண்டு சென்றுள்ளார்.
தொடர்ந்து அப்பெண்ணிடம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், இடைத்தரகர் ஆகியோர் லஞ்ச தொகையை பெற்ற போது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் மூவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இது தொடர்பாக அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.