கடலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜனின் மகள் புனிதா(18). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை படித்துவரும் இவருக்கும், சமயபுரம் ஸ்டீபன்ராஜ் என்பவரது மகன் சேவியர் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தன்னை காதலிக்குமாறு புனிதாவை சேவியர் கட்டாயப்படுத்தியதாக தெரியவருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 1) சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் இருந்து மாணவி புனிதா வரும்போது, தான் மறைத்துவைத்திருந்த பேனா கத்தியால் புனிதாவின் கழுத்தை அறுத்துவிட்டு, தன்னைத்தானே கத்தியால் சேவியர் அறுத்துக்கொண்டார். இதில், படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் நடத்திய விசாரணையில், புனிதாவை சேவியர் ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாகவும், மற்றொருவருடன் இருசக்கர வாகனத்தில் புனிதா சென்றதைப் பார்த்து ஆத்திரமடைந்து சேவியர் இப்படி செய்ததாகவும் தெரியவந்தது.
இதையும் படிங்க: நடத்தை விதிமீறல்! - திமுக கொடிகள் அகற்றம்!