சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் சென்னைக்கு 830 கிலோ மீட்டர் தொலைவில் மணிக்கு 12 கிலோ மீட்ட வேகத்தில் நகர்ந்து வரும் நிலையில், இன்று மாலை மாண்டஸ் புயலாக மாறவுள்ளது.
மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகா்ந்து வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (டிசம்பர் 8 மற்றும் 9) வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை புதன்கிழமை (டிசம்பர் 7) பெய்யக்கூடும்.
நாளை வியாழக்கிழமை அன்று சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் அதி பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: யார் தீபம் ஏற்றுவது? ஓபிஎஸ் குடும்பம் - திமுகவினர் இடையே மோதல்!