கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்காக சித்தா சிகிச்சை மையம் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு இன்று காலை வழங்கப்பட்ட இட்லி பொட்டலம் ஒன்றில் பல்லி கிடந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கரோனா நோயாளி, சக நோயாளிகளிடம் இட்லி பொட்டலத்தை காண்பித்து இட்லியை சாப்பிட வேண்டாம் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து மையத்தில் இருந்த ஊழியர்களிடம் இதுதொடர்பாக அந்நோயாளி கேட்டுள்ளார்.
முறையான பதிலை மையத்தில் இருந்த ஊழியர்கள் அளிக்காததால், 30-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்திலிருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து அறிந்து சம்பவ இடம் விரைந்த சித்த மருத்துவர் செந்தில்குமார், கடலூர் மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததைத் தொடர்ந்து கரோனா நோயாளிகள் சித்த மருத்துவ மையத்திற்குள் சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: உணவு சரியில்லாததை கண்டித்து கரோனா நோயாளிகள் சாலை மறியல்!