கடலூரில் மழை பெய்ய வேண்டி தமிழக அரசு சார்பில் கோயிலில் இன்று சிறப்பு யாகம் நடைப்பெற்றது. தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயில் கொடுமை அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மழை பெய்ய வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையொட்டி கடலூரில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மழை பெய்ய வேண்டி வருண யாகம் இன்று நடைபெற்றது. இதில் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் தேன் இளநீர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட 27 விதமான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து, சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெற்றன.
இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரேணுகா தேவி தலைமையில் இந்த யாகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.