காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் தேர்தலை முன்னிட்டு விதிமீறல்கள் நடகின்றனவா? என்பது குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் ஹெலிகாப்டர் ஒன்று வந்து இறங்கியது. இதைத்தொடர்ந்து கண்காணிப்புக் குழு அலுவலர் சேரன், பறக்கும் படை அலுவலர் ராமச்சந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் அண்ணாமலை, மாரியப்பன் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில், கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் கல்யாணராமன் குடும்பத்துடன் வந்திருப்பதும், காட்டுமன்னார்கோவில் அங்காளம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்துக்கு குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதற்காக வந்தது தெரியவந்தது.
ஹெலிகாப்டரில் நடத்திய சோதனையில், எந்தவித ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர். பின்னர், அவர்கள் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு நடத்தி விட்டு காட்டுமன்னார் கோயிலில் இருந்து கேரளா சென்றனர்.
பலகோடி ரூபாய் வருமானம்வரும் தனியாருக்குச் சொந்தமான இந்தக் கோயிலுக்கு பல முக்கியப் புள்ளிகள் வந்து செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தக் கோயிலை அரசு எடுத்து நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: தளி தொகுதி அருகே ரூ. 2.50 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை!