கரோனா வைரஸ் தமிழ்நாடு முழுவதும் கோரதாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்னைக்கு அடுத்தப்படியாக கடலூரில் அதிகமாக உள்ளது. கடலூரில் இதுவரை 436 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மத்திய சிறையில் இருந்த இரண்டு கைதிகளை மூன்று காவலர்கள் துணையோடு சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்று பின்னர் கடலூர் மத்திய சிறைக்கு திரும்பினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் இரண்டு கைதிகளுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறையில் உள்ள 680 கைதிகளுக்கும் சிறையில் உள்ள காவலர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடலூர், சிதம்பரம், விருதாச்சலம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 417 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் தூக்கிட்டுத் தற்கொலை