தமிழ்நாட்டில் கடலூர் உள்ளிட்ட 38 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் கடலூர் மக்களவைத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'கடலூர் அரசு கலைக்கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் சிசிடிவி மூலம் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் கடலூர் மாவட்டத்திற்கு புயல் எச்சரிக்கை விடவில்லை. பொதுவான முறையில்தான் புயல் எச்சரிக்கை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தும் கடலூர் மாவட்டத்தில் புயல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது' எனத் தெரிவித்தார்.