கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மேலப்பாளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர் (60). இவர் அக்கிராமத்தில் செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அறங்காவலராகப் பணிபுரிந்துவருகிறார்.
இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தவலிங்க செல்வராயர், அதே கிராமத்தைச் சேர்ந்த விருதகிரி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் தலையில் பலத்த காயங்களுடன், உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் இறந்துகிடந்துள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தவலிங்க செல்வராயரின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.