கடலூர் : பண்ருட்டி வட்டம், ஏ.குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆறு பாய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் தண்ணீரைத் தடுத்து வைக்கும் அளவில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணை தற்போது சேறும் சகதியுமாக உள்ளது. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் நவநீதம் (20), அவரது மருமகளும் குணாள் மனைவியுமான பிரியா (19) ஆகியோர் குளிக்க சென்றுள்ளனர்.
உடன், அவர்களது வீட்டிற்கு வந்திருந்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த உறவினரான ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி (13), காவியா (11) ஆகியோரும் குளிக்கச்சென்றுள்ளனர். இதில், தடுப்பணை சேற்றில் சிக்கியவரை ஒருவர் ஒருவர் மாற்றி காப்பாற்ற முயன்று சேற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த முத்துராமன் மகள் சுமதா (16), அமர்நாத் மகள் மோனிகா (16), சங்கர் மகள் சங்கவி (15) ஆகியோரும் காப்பாற்றச்சென்று அவர்களும் சேற்றில் சிக்கிக்கொண்டனர்.
தகவலறிந்த அப்பகுதியினர் ஆற்றுக்குள் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவராக 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் உயிரிழந்தனர். தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு கதறிஅழுதனர். இதனையடுத்து, தடுப்பணை கட்ட ஆற்றின் ஓரத்தில் தோண்டப்பட்ட குழிகளை மூடாததே உயிரிழப்பிற்குக்காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை கல்குவாரி விபத்து - உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அண்ணாமலை ஆறுதல்!