தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (20). இவர் கோவை கணபதி அருகே உள்ள கேஆர்ஜி நகரில், வீடு வாடகைக்கு எடுத்து, அங்கு மெக்கானிக் ஆக பணியாற்றிவந்தார்.
அவருடன், திருப்பூர் மாவட்டம், புகலூர் அருகே உள்ள பாலத்துறையைச் சேர்ந்த மணிகண்டன் (23) என்பவரும் தங்கி வந்துள்ளார். சிவக்குமார் காதலித்த பெண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததால், அவர் வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு சிவக்குமார், மணிகண்டன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சிவக்குமாரின் காதலி குறித்து மணிகண்டன் இழிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால், இருவருக்கும் இடையே வாய்த் தகராறு முற்றி கைகலப்பாகியுள்ளது. மேலும், மணிகண்டன் தூங்கும்போது கொலை செய்துவிடுவதாக சிவக்குமார் கூறியுள்ளார். பிறகு, இருவரும் தூங்கச் சென்றுள்ளனர்.
பின்னர், சிவக்குமார் கூறியதுபோல, தம்மைக் கொன்றுவிடுவார் என்ற அச்சத்தில் மணிகண்டன், வீட்டிலிருந்த உடற்பயிற்சி செய்யும் எடைக்கல்லை எடுத்து, சிவக்குமார் தலையில் தாக்கியுள்ளார். இதில் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து மணிகண்டன் அங்கிருத்து தப்பியோடியுள்ளார். பின்னர், காலையில் வீட்டில் சிவக்குமார் உயிரிழந்து கிடந்ததைக் கண்ட பக்கத்துவீட்டுக்காரர், இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சிவக்குமாரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தப்பியோடிய மணிகண்டனைத் தேடி பிடித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெற்றோரை கொலை செய்த மகன் கைது!