கோயம்புத்தூர்: ஒண்டிப்புத்தூரில் வசித்து வருபவர் சையது இப்ராகிம். இவரது மாமனார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை நேரில் சென்று நலம் விசாரிக்க சையது குன்னூர் சென்றுள்ளார். பத்து நாள்களுக்கு பிறகு கடந்த 24ஆம் தேதி சையது இப்ராகிம் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 29 சவரன் நகைகள், 10ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சிங்காநல்லூர் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வீட்டிற்கு அருகில் தங்கி கூலி வேலை செய்து வந்த தூத்துகுடியைச் சேர்ந்த சுடலை கண்ணு என்ற இளைஞர் இரும்பு கம்பியுடன் சுற்றி திரிந்தது தெரியவந்தது.
மேலும் கடந்த சில நாள்களாக சுடலை கண்ணு மாயமாகியிருந்தது காவல் துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை தேடி வந்ததனர். இந்நிலையில் கோவை எ.ஜி புதூர், எல்.என்.டி சாலை அருகே சுற்றி திரிந்த சுடலை கண்ணுவை பிடித்து விசாரித்தபோது, அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்து 20 சவரன் நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண் குழந்தையை கடத்திய நபர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்